2932. | வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த, வழியில் யாண்டும் ஓய்வில, நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின, உலைந்த கண்ண, தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய, சென்று, வேய் தெரிந்து உரைப்ப போன்ற- புள்ளொடு விலங்கும் அம்மா! |
புள்ளொடு விலங்கும் - அந்த வனத்திலுள்ள பறவைகளும் மிருகங்களும்; வாய் புலர்ந்து அழிந்த - (அச் சேனையைக் கண்டு அஞ்சியதால்) வாய் உலர்ந்து மனநிலை கெட்டனவும்; மெய்யின் வருத்தத்த - உடம்பில் வருத்தம் உடையனவும்; வழியில் யாண்டும் ஓய்வு இல - இடை வழியில் எங்கும் தங்கி இளைப்பாறாதனவும்; நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின - அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விடுவனவும்; உலைந்த கண்ண - பார்வை மழுங்கிய கண்களையுடையனவுமாகி; தீயவர் சேனை வந்து சேர்ந்தமை - (ஓடிவந்து) கொடிய அந்த அரக்கர் சேனை வந்து சேர்ந்த செய்தியை; தெரிந்து - தாம் அறிந்து, சென்று தெரிய உரைப்ப - முன் வந்து இராமலக்குவர் அறியும் படி செய்தி கூறுபவரான; வேய் போன்ற - ஒற்றர்களை ஒத்தன. அம்மா - ஈற்றசை; வியப்பிடைச் சொல்லுமாம். பறவைகளும் மிருகங்களும் மிகவும் அஞ்சி நிலைகெட்டுத் தரிப்பின்றி அரக்கர் சேனை வருவதற்கு முன்பே இராமபிரான் வீற்றிருந்த பர்ணசாலையை நோக்கி விரைந்தோடி வந்தன, அரக்கர் சேனை வருவதையறிவதற்குக் காரணமாயிற்று என்பது. அந்தப் பறவை விலங்குகளை வந்து செய்தி கூறும் ஒற்றர் போன்றன என்றார். தன்மைத் தற்குறிப்பேற்றவணி. 58 |