2933.தூளியின் படலை வந்து
     தொடர்வுற, மரமும் தூறும்
தாள் இடை ஒடியும் ஓசை
     'சடசட' ஒலிப்ப, கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி
     இரிதரும் அமலை நோக்கி,
மீளி மொய்ம்பினரும், 'சேனை மேல்வந்தது
     உளது' என்று உன்னா,

    தூளியின் படலை - தூசியின் தொகுதி; வந்து தொடர்வு உற -
முன்னே வந்து படியவும்; மரமும் தூறும் - (அக் காட்டிலிருந்த)
மரங்களும் புதர்களும்; தாள்இடை ஒடியும் ஓசை - வரும் அரக்க
வீரர்களின் கால்களில் அகப்பட்டு ஒடிவதால் உண்டாகிய ஓசை; 'சடசட'
ஒலிப்ப -
சடசடவென்று ஒலிக்கவும்; கானத்து ஆளியும் - காட்டிலுள்ள
யாளிகளும்; அரியும் - சிங்கங்களும்; அஞ்சி இரிதரும் - பயந்து
நிலைகெட்டு ஓடுகின்ற; அமலை நோக்கி - பேராரவாரத்தைப் பார்த்து;
மீளி மொய்ம்பினரும் - வலிய தோள்களையுடைய இராமலக்குவரும்;
சேனை மேல் வந்தது உளது என்று உன்னா - அரக்கர் சேனை
தம்மோடு போருக்கு வந்துள்ளது என்று எண்ணி..

     உன்னா என்னும் செயவென் எச்சம் அடுத்த செய்யுளிலுள்ள
மொழியலுற்றான் என்ற வினை கொண்டு முடியும். படலை - கூட்டம்,
தொகுதி; அமலை - பேரொலி. சடசட - ஒலிக்குறிப்பு.

     தூளியின் தொகுதியும், சடசட ஒலியும், ஆளியும் சிங்கமும்
அஞ்சியோடும் ஆரவாரமும் நோக்கி மீளி மொய்ம்பினரான
இராமலக்குவரும் அரக்கர் சேனை போர் செய்ய வந்துள்ளது என்று
எண்ணினர் என்பது.                                           59