இலக்குவனைத் தடுத்து இராமன் போருக்கு எழுதல் 2934. | மின் நின்ற சிலையன், வீரக் கவசத்தன், விசித்த வாளன், பொன் நின்ற வடிம்பின் வாளிப் புட்டிலன், புகையும் நெஞ்சன், 'நில்; நின்று காண்டி, யான் செய் நிலை' என விரும்பி நேரா முன் நின்ற பின் வந்தோனை நோக்கினன், மொழியலுற்றான்: |
மின் நின்ற சிலையன் - மின்னல் போன்று ஒளி பொருந்திய வில்லைத் தாங்கியவனும்; வீரக் கவசத்தன் - அழியாத வலிமை வாய்ந்த கவசத்தையுடையவனும்; விசித்த வாளன் - (இடையில்) கட்டிய உடைவாளையுடையவனும்; பொன் நின்ற - அழகு பொருந்திய; வடிம்பின் வாளிப் புட்டிலன் - நுனியுள்ள அம்புகளைக் கொண்ட அம்பறாத் தூணியையுடையவனும்; புகையும் நெஞ்சன் - கோபத் தீ மூண்ட மனமுடையவனுமாய் (இராமனை நோக்கி); 'நில் - (போர் தொடங்காது) நில்; நின்று - (அப்படி) நின்று; யான் செய் நிலை - நான் செய்யக் கூடிய போரின் திறமையை; 'காண்டி' என - காண்பாய் என்று சொல்லி; விரும்பி- (போர் செய்ய) விருப்பங் கொண்டு; நேரா - போருக்கு ஆயத்தமாகி; முன் நின்ற - (தனக்கு) முன்னே வந்து நின்ற; பின் வந்தோனை - (தன்) தம்பியான இலக்குவனை; நோக்கினன் - பார்த்து; மொழியல் உற்றான் - (இராமன்) சொல்லத் தொடங்கினான். வனத்திலே கொடிய அரக்கர்களாலும், கொடிய மிருகங்களாலும் தன் தமையனுக்கும், அவன் மனைவிக்கும் என்றேனும் ஏதேனும் தீங்கு நேருமோ என்று சந்தேகித்து இலக்குவன் எப்பொழுதும் விழிப்போடு வில்லேந்தித் தூணி தாங்கிக் கவசம் தரித்து வாள் கட்டிப் போருக்குச் சித்தனாக நிற்பவன். அவ்வாறு நின்ற அவன் இப்போது போர் வருவது தெரிந்தவுடனே பின்னும் போர் முயற்சியை மேற்கொள்கிறான் என்பது. மின்நின்ற சிலை : இல்பொருளுவமை. விரும்பி நேரா - போர் செய்ய விரும்பி அதற்கு உடன்பட்டு என்றும் பொருள் கொள்ளலாம். 60 |