2935.'நெறி கொள் மா தவர்க்கு, முன்னே
     நேர்ந்தனென்: "நிருதர் ஆவி
பறிக்குவென் யானே" என்னும்
     பழமொழி பழுதுறாமே,
வெறி கொள் பூங் குழலினாளை, வீரனே!
     வேண்டினேன் யான்,
குறிக்கொடு காத்தி; இன்னே கொல்வென்,
     இக் குழுவை' என்னா,

    வீரனே - வீரனே; நெறி கொள் மாதவர்க்கு - தவவொழுக்கத்தைக்
கடைப் பிடிக்கும் தவ முனிவர்களுக்கு; முன்னே நேர்ந்தனென் -
முன்னமே நான் உடன்பட்டு; யானே நிருதர் ஆவி பறிக்குவென் -
நானே அரக்கர்களின் உயிரைக் கவர்வேன்; என்னும் பழமொழி - என்று
உறுதிமொழி கூறிய பழைய வார்த்தை; பழுதுறாமே - வீண் போகாதவாறு;
இக் குழுவை இன்னே கொல்வேன் - இந்த அரக்கர் கூட்டத்தை
இப்பொழுதே கொல்வேன்; வெறி கொள் பூங் குழலினாளை -
மணங்கமழும் பூக்களைச் சூடின கூந்தலையுடைய சீதையை; குறிக்
கொடுகாத்தி -
நீ கருத்தோடு காப்பாய்; யான் வேண்டினேன் - நான்
உன்னை இது வேண்டினேன்; என்னா - என்று (இராமன் இலக்குவனிடம்)
சொல்லி.....;

     'புட்டில் கட்டிச் சாபமும் தரித்தான்' என வரும் அடுத்த செய்யுளோடு
தொடரும். அரக்கர்களுக்கு அஞ்சிச் சரணடைந்த தண்டகாரணிய
முனிவர்களுக்கு இராமன் அபயமளித்தது. அகத்தியப் படலத்தில்
கூறப்பெற்றது. குறிக் கொள்ளுதல்- உன்னிப்பாய்ப் பார்த்துக்கொள்ளுதல். 61