2936. | மரன் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை கரன் படை என்பது எண்ணி, கரு நிறக் கமலக்கண்ணன், சரன் படர் புட்டில் கட்டி, சாபமும் தரித்தான்; தள்ளா உரன் படர் தோளில் மீளாக் கவசம் இட்டு, உடைவாள் ஆர்த்தான். |
மரன் படர் கானம் எங்கும் - மரங்கள் வளர்ந்த காடு முழுவதும்; அதர்பட - வழியுண்டாக; வந்த சேனை - அங்கு வந்த அரக்கர் சேனை; கரன் படை என்பது எண்ணி - கரனது சேனை என்பதை நினைத்து; கரு நிறக் கமலக் கண்ணன் - கரிய நிறத்தையும், தாமரை போன்ற பொலிவையும் கொண்ட கண்களையுடைய இராமபிரான்; தள்ளா உரன் படர் தோளில் - (தன்) நீங்காத வலிமை மிக்க தோளிலே; சரன் படர் புட்டில் கட்டி- அம்புகள் நிறைந்த தூணியைக் கட்டி; சாபமும் தரித்தான்- வில்லையும் தரித்தவனாகி; மீளாக் கவசம் இட்டு - தகர்க்க முடியாத கவசத்தைத் தரித்து; உடைவாள் ஆர்த்தான் - உடைவாளையும் (அரையில்) கட்டினான். மரன், சரன், உரன் மாறி வரும் கடைப் போலி, வந்தது கரன் படையே என இராமன் தீர்மானித்தது முன் "கரனை, உங்கள் கூற்றுவனை இப்பொழுதே கொணர்கிறேன்" (2874) என்று சூர்ப்பணகை கூறிச் சென்றுள்ளாளாதலால் என்க. மதர்பட எனப் பாடங்கொண்டு செருக்கு மேலிட்டு எனப் பொருள் கூறுதலுமுண்டு. 62 |