'இப் போரினை எனக்கு அருள்க என, இலக்குவன் மீண்டும் வேண்டுதல் | 2937. | 'மீள அருஞ் செருவில், விண்ணும் மண்ணும் என்மேல் வந்தாலும், நாள் உலந்து அழியும் அன்றே? நான் உனக்கு உரைப்பது என்னே? ஆளியின் துப்பினாய்! இவ் அமர் எனக்கு அருளிநின்று, என் தோளினைத் தின்னுகின்ற சோம்பினைத் துடைத்தி' என்றான். |
ஆளியின் துப்பினாய் - யாளி போன்ற வலிமையுடையவனே!; விண்ணும் மண்ணும் - வானுலகத்து உயிர்களும், இம் மண்ணுலகில் வாழ்பவர்களும்; மீள அருஞ் செருவில் - வென்று திரும்பிச் செல்ல முடியாத போரில்; என் மேல் வந்தாலும் - என்னை எதிர்த்துத் திரண்டு வந்தாலும்; நாள் உலந்து அழியும் அன்றே - (அந்த வானுலக உயிர்களும் நிலவுலக உயிர்களும் ஆகிய யாவும்) என் முன்னே தம் ஆயுட் காலம் ஒழிந்து அழிந்திடுமல்லவா?; நான் உனக்கு உரைப்பது என்னே - இதைப் பற்றி நான் உனக்குச் சொல்ல வேண்டுவது உண்டோ?; இவ் அமர் எனக்கு அருளி நின்று - (ஆதலால்) இந்தப் போரை எனக்கு நீ கொடுத்து; என் தோளினைத் - என் தோள்களை; தின்னுகின்ற சோம்பினை - வருத்துகின்ற சோம்பலை; துடைத்தி என்றான் - (நீ) போக்குவாய் என்று இலக்குவன் இராமனை நோக்கிக் கூறினான். 'நான் உனக்கு உரைப்பதென்னே' என்றது உனக்குத் தெரிந்ததேயென வற்புறுத்தியவாறு. சோம்பு : போர்த் தொழிலில்லாமல் கிடக்கின்ற மந்த குணம். அடுத்த செய்யுளில் (2938) 'என்றனன் இளைய வீரன்' என்றதனால் இப் பாட்டிற்கு எழுவாய் இலக்குவன் என்பது அறியப்படும். 63 |