இலக்குவனுக்கு இசையா இராமன் தானே போர்மேல் செல்லுதல்

2938. என்றனன் இளைய வீரன்;
     இசைந்திலன் இராமன், ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல்
     உள்ளத்தில் உணரக் கொண்டான்;
அன்றியும், அண்ணல் ஆணை
     மறுக்கிலன்;அங்கை கூப்பி-
நின்றனன், இருந்து கண்ணீர் நிலன்
     உறப் புலர்கின்றாள்பால்

    என்றனன் இளைய வீரன் - இவ்வாறு இலக்குவன் சொன்னான்;
இராமன் இசைந்திலன் - (அதைக் கேட்ட) இராமபிரான் உடன்படவில்லை;
(ஆதலால் பின்னர் இலக்குவன்); ஏந்தும் குன்று அன தோளின் ஆற்றல்
-
(இராமனுடைய) உயர்ந்த மலையைப் போன்ற தோள்களின் வலிமையை;
உள்ளத்தில் உணரக் கொண்டான் - மனத்திலே அறிந்து
கொண்டானாதலாலும்; அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் -
(அது அல்லாமலும்) தமையனது கட்டளையை மறுக்க
மாட்டாதவனாதலாலும்; அங் கை கூப்பி - (தன்) அழகிய கைகளைக்
கூப்பித் தொழுது; கண் நீர் நிலன் உற - கண்ணீர் நிலத்திலே வழியும்படி;
புலர்கின்றாள்பால் - வருந்துகின்ற சீதையின் அருகே; இருந்து -
(பாதுகாப்பாக) இருந்து; நின்றனன் - காவல் காத்து நின்றான்.

     சீதை புலந்தது, போரில் பெருமானுக்கு என்ன துன்பம் உண்டாகுமோ
என்பதால், துணையில்லாமல் தனியே மிகப் பலரோடு போர் செய்ய எழுந்த
இராமனைக் குறித்துச் சீதை கவலைப்பட்டது போல இலக்குவன்
வருத்தப்படாததன் காரணத்தை இரண்டாமடி விளக்கும். இராமன் கரனை
எதிர்த்துப் போர் செய்யப் புறப்பட்டபோது சீதை வருந்தியதைப் பின்னும்
கூறுவார். (5086)                                              64