2939.குழையுறு மதியம் பூத்த கொம்பனாள்
     குழைந்து சோர
தழையுறு சாலைநின்றும், தனிச்
     சிலை தரித்த மேரு,
மழை என முழங்குகின்ற வாள்
     எயிற்று அரக்கர் காண,
முழையின் நின்று எழுந்து செல்லும்
     மடங்கலின், முனிந்து, சென்றான்.

    குழையுறு - காதணி பொருந்திய; மதியம் பூத்த - சந்திரனை
மலராகப் பெற்ற; கொம்பு அனாள் - ஒரு பூங்கொம்பையொத்தவளான
சீதை; குழைந்து சோர - தளர்ந்து வருத்தமடைய; தழை உறு சாலை
நின்றும் -
தழைகளால் அமைந்த அந்தப் பர்ணசாலையிலிருந்து; தனிச்
சிலை தரித்த மேரு -
ஒப்பற்ற வில்லையேந்திய மேரு மலையைப் போன்ற
இராமன்; மழை என முழங்குகின்ற - மேகம்போல ஆரவாரிக்கின்ற; வாள்
எயிற்று அரக்கர் காண -
கூரிய பற்களையுடைய அந்த அரக்கர்கள்
பார்க்கும்படி; முழையின் நின்று - மலைக் குகையிலிருந்து; எழுந்து
செல்லும் மடங்கலின் -
எழுந்து வெளியே செல்லும் ஆண் சிங்கம் போல;
முனிந்து சென்றான் - கோபத்தோடு புறப்பட்டான்.

     பர்ணசாலையிலிருந்து இராமன் புறப்பட்ட காட்சி மலைக்
குகையிலிருந்து ஒரு சிங்கம் முழங்கி வெளியே புறப்படுவது போல உள்ளது
என்றார். குழையுறு மதியம் பூத்த கொம்பு - இல் பொருளுவமை.
குழையென்னும் அணியைப் பூண்ட முகம் முழு நிலவையும், அழகிய
திருமேனி பூங் கொம்பையும் ஒத்திருப்பதால் இவ்வாறு கூறினார். மேரு -
உவமையாகுபெயர். சிலை தந்த மேரு - இல்பொருளுவமை.          65