சூர்ப்பணகை கரனுக்கு இராமனைக் காட்டுதல் 2940. | தோன்றிய தோன்றல் தன்னைச் சுட்டினள் காட்டி, சொன்னாள்- வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெந் தீ இது என்ன, தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள்- 'ஏன்று வந்து எதிர்ந்த வீரன் இவன், இகல் இராமன்' என்றே. |
வான் தொடர் மூங்கில் தந்த - ஆகாயத்தையளாவி வளர்ந்த மூங்கில்கள் (உராய்வதால்) உண்டாக்கிய; வயங்கு வெம் தீ இது என்ன - விளங்குகின்ற கொடிய நெருப்பைப் போல; தான் தொடர் குலத்தை எல்லாம் - தான் பிறந்த குலம் முழுவதையும்; தொலைக்குமா சமைந்து நின்றாள் - அழிக்கும்படி அச் செயலில் பொருந்தி நின்ற சூர்ப்பணகை; தோன்றிய தோன்றல் தன்னை - வெளியே தென்பட்ட இராமபிரானை; சுட்டினள் காட்டி - சுட்டிக் காண்பித்து; ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் - போர் கோலம் பூண்டு வந்து எதிர்ப்பட்ட இந்த வீரனே; இகல் இராமன் என்று - (நம்மிடம்) பகைமை கொண்ட இராமன் என்று; சொன்னாள் - கூறினாள். ஏ - அசை. மூங்கிலில் பிறந்த தீ அந்த மூங்கில் தொகுதிகளையெல்லாம் எரித்தழிப்பது போல அரக்கர் குலத்திலே பிறந்த சூர்ப்பணகை அந்த அரக்கர் குலத்தையெல்லாம் பூண்டோடு அழிப்பதற்கு மூல காரணமாக இருந்தமையால் அவளை மூங்கிலிலிருந்து தோன்றும் நெருப்புக்கு உவமை கூறினார் சுட்டினாள் : முற்றெச்சம். 66 |