கரன் இராமனுடன் தானே பொருவேன் எனல் 2941. | கண்டனன், கனகத் தேர்மேல், கதிரவன் கலங்கி நீங்க, விண்டனன் நின்ற, வென்றிக் கரன் எனும் விலங்கல் தோளான்; 'மண்டு அமர் யானே செய்து, இம் மானிடன் வலியை நீக்கி, கொண்டனென் வாகை' என்று, படைஞரைக் குறித்துச் சொன்னான். |
கதிரவன் கலங்கி நீங்க - பல ஆயிரம் கதிர்களையுடைய சூரியனும் கலக்கமுற்று நீங்கும்படி; கனகத் தேர்மேல் - பொன் மயமான தேரின் மேல்; விண்டனன் நின்ற - பகைத்து நின்ற; வென்றிக் கரன் எனும் - வெற்றியையுடைய கரன் என்கிற; விலங்கல் தோளான் - மலைகள் போன்ற தோள்களையுடைய அரக்க வீரன்; கண்டனன் - (இராமபிரானைக்) கண்டு; படைஞரைக் குறித்து - தன் படை வீரர்களை நோக்கி; 'யானே மண்டு அமர் செய்து - நான் ஒருவனே இந்தப் பெரிய போரைச் செய்து; இம் மானிடன் வலியை நீக்கி - இந்த மனிதனது ஆற்றலை அழித்து; வாகை கொண்டனென்' - வெற்றிமாலையைச் சூடுவேன்; என்று சொன்னான் - என்று கூறினான். தனிப்பட இராமன் ஒருவனே போர் செய்ய எதிரே நிற்பதால் அது கண்ட கரன் 'இவனை வெல்வதற்குத் துணையாக எனக்குச் சேனையோ துணைப் படையோ வேண்டா; நானே வெல்வேன்' என்று எளிதாகக் கூறினான் என்பது. விரைவும் தெளிவும் பற்றிக் கொண்டனன் இறந்த காலத்தால் கூறினான்; காலவழுவமைதி. விண்டனன் கண்டனன் - முற்றெச்சங்கள். விண் : இடவாகுபெயர். விலங்கல் : மலை - தொழிற்பெயர். விலங்கல் தோள் : மலை போல வலிமையும் பெருமையும் கொண்டமையால். 67 |