2942. | ' "மானிடன் ஒருவன்; வந்த வலி கெழு சேனைக்கு, அம்மா! கான் இடம் இல்லை" என்னும் கட்டுரை கலந்த காலை யானுடை வென்றி என் ஆம்? யாவரும் கண்டு நிற்றிர்; ஊனுடை இவனை, யானே, உண்கு வென் உயிரை' என்றான். |
மானிடன் ஒருவன் - (மேலும் கரன் தன் படை வீரர்களை நோக்கி) 'எதிரியாக நிற்கும் மனிதனோ ஒருவன்; வந்த வலி கெழு சேனைக்கு - (அவனோடு எதிராகப் போர் செய்ய) வந்த வலிமையுள்ள அரக்கர் சேனைக்கோ; கான் இடம் இல்லை - காட்டில் (நிற்க) இடம் போதவில்லை; அம்மா என்னும் - ஆச்சரியம் தான் என்று (உலகத்தார்) சொல்கின்ற; கட்டுரை கலந்த காலை - ஏற்ற வார்த்தை தோன்றும் போது; யான் உடை வென்றி என் ஆம் - நான் கொண்டுள்ள வெற்றி என்ன பயனைத் தருவதாகும்? (பயனற்றது) (ஆதலால்); யாவரும் கண்டு நிற்றிர் - நீங்கள் எல்லோரும் (போர் செய்யாமல்) பார்த்துக் கொண்டு நில்லுங்கள்; யானே - நான் ஒருவனே; ஊனுடை இவனை - (நமக்கு) இறைச்சியுணவாகும் இம் மனிதனை; உயிரை உண்குவென்' என்றான் - உயிரைக் குடிப்பேன்; என்றான் - என்றும் கூறினான். ஒரு மனிதனோடு போர் செய்யப் பெரிய சேனையோடு சென்று மிக்க சேனை எதிர்த்து வெற்றி கண்டால் அது எனது புகழுக்குப் பழியாகும். ஆதலால் நீங்கள் அனைவரும் காண நானே இந்த மனிதனை வென்று கொன்று தின்பேன் என்றான் கரன் என்பது. யாவரும் நிற்றிர் - இடவழுவமைதி. இவனை உயிரை உண்குவென் - இரண்டு செயப்படுபொருள் வந்த வினை. 68 |