தீய சகுனம் கண்ட அகம்பன் அறிவுரை

2943. அவ் உரை கேட்டு வந்தான், அகம்பன்
     என்று அமைந்த கல்விச்
செவ்வியான் ஒருவன்; 'ஐய!
     செப்புவென்; செருவில் சால
வெவ்வியர் ஆதல் நன்றே;
     வீரரில் ஆண்மை வீர!
இவ் வயின் உள ஆம் தீய நிமித்தம்'
     என்று, இயம்பலுற்றான்.

    அகம்பன் என்று அமைந்த - அகம்பன் என்று பெயர் கொண்ட;
கல்விச் செவ்வியான் ஒருவன் - கல்விச் சிறப்புடைய ஓர் அரக்கன்; அவ்
உரை கேட்டு வந்தான் -
கரனின் அந்த வார்த்தைகளைக் கேட்ட
அளவில் (அவன் அருகே) வந்து; 'ஐய - தலைவனே!; வீரரில் ஆண்மை
வீர-
வீரர்களுள் சிறந்த வலிமையுடைய வீரனே; செப்பு வென் - நான் ஒரு
செய்தியைச் சொல்லுவேன் (கேட்பாயாக); செருவில் சால வெவ்வியர்
ஆதல் நன்று -
'போரில் மிகக் கடுமையுடையவராக இருப்பது இயல்பாக
நல்லதுதான் (ஆனாலும்); இவ்வயின் - இந்த இடத்தில் (இப்பொழுது); தீய
நிமித்தம் உள ஆம் -
அழிவைக் காட்டிடும் தீய அறிகுறிகள்
உண்டாகின்றன; என்று - என்று சொல்லி; இயம்பல் உற்றான் - (அக்
கொடிய நிமித்தங்களைக் குறித்து) விரிவாகக் கூறத் தொடங்கினான்; ஏ -
அசை.

     நூல் தெரிந்தவன் என்பது தோன்ற அகம்பனை 'அமைந்த கல்விச்
செவ்வியான்' என்றார். அகம்பன் - போரில் சலனம் (நடுக்கம்) இல்லாதவன்.
நிமித்தம் - பின்னே வரும் பயன்களை முன்னே அறிவிக்கும் குறி,
உற்பாதமாகும்.                                                69