கலிநிலைத் துறை

2944.'குருதி மா மழை சொரிந்தன,
     மேகங்கள் குமுறி;
பருதி வானவன் ஊர் வளைப்
     புண்டது; பாராய்,-
கருது வீர!- நின் கொடிமிசைக்
     காக்கையின் கணங்கள்
பொருது வீழ்வன, புலம்புவ,
     நிலம் படப் புரள்வ;

    வீர - வீரனே!; மேகங்கள் குமுறி - மேகங்கள் முழங்கி; குருதி மா
மழை சொரிந்தன -
மிக்க இரத்த மழையைப் பொழிந்தன; பருதி
வானவன் -
சூரியனை; ஊர் வளைப்புண்டது - பரிவேடம் சூழ்ந்து
கொண்டது; பாராய் - (அவற்றை) பார்ப்பாய்; காக்கையின் கணங்கள் -
காக்கைக் கூட்டங்கள்; நின் கொடி மிசை - உன் கொடியின் மேல்;
பொருது வீழ்வன - சண்டையிட்டுக் கீழே விழுவனவாய்; புலம்புவ -
கதறியழுது கொண்டு; நிலம்படப் புரள்வ - தரையில் விழுந்து புரளுகின்ற;
கருது - (இதனை நீ) மனத்திற் கொள்வாய்;

     மேகங்கள் குமுறி, இரத்த மழை பொழிதலும், சூரியனைப் பரிவட்டம்
சூழ்தலும், கொடி மேல் காக்கைக் கூட்டங்கள் சண்டையிட்டுப் புலம்பி
நிலத்தில் புரளுதலும் ஆகிய தீ நிமித்தங்களைக் கரனுக்கு அகம்பன்
சொன்னான் என்பது.

     ஊர் - பரிவட்டம் : சூரியனைச் சுற்றித் தோன்றும் வட்டம்.     70