2945.'வாளின் வாய்களை ஈ
     வளைக்கின்றன; வயவர்
தோளும் நாட்டமும் இடம்
     துடிக்கின்றன; தூங்கி,
மீளி மொய்ம்புடை இவுளி
     வீழ்கின்றன; விரவி,
ஞாளியோடு நின்று, உளைக்கின்ற
     நரிக் குலம் பலவால்;

    'வாளின் வாய்களை - வாள்களின் வெட்டு வாய்களை;
வளைக்கின்றன -
ஈக்கள் சுற்றுகின்றன; வயவர் தோளும் நாட்டமும் -
படை வீரர்களின் தோள்களும் கண்களும்; இடம் துடிக்கின்றன - இடப்
பக்கமாகத் துடிக்கின்றன; மீளி மொய்ம்புடை இவுளி - வலிய
தோள்களையுடைய சேனைத் தலைவரின் குதிரைகள்; தூங்கி வீழ்கின்றன
-
(போர் செய்யும் நிலையில்) தூங்கிக் கீழே விழுகின்றன; ஞாளியோடு
நரிக்குலம் பல -
நாய்களோடு பல நரிக் கூட்டங்கள்; விரவி நின்று -
சேர்ந்து வந்து நின்றவாறு; உளைக்கின்ற - ஊளையிடுகின்றன; ஆல் -
ஈற்றசை.

     ஆயுதங்களின் வெட்டு வாய்களை ஈக்கள் சுற்றுவதும், வீரர்களின்
தோள்களும் கண்களும் இடம் துடிப்பதும், குதிரைகள் தாமே
தூங்கிவிடுவதும், நாய் நரிகள் ஊளையிடுவதும் தீ நிமித்தங்களாகும்.
உளைக்கின்ற - பலவின் பால் முற்று.                            71