2946. | 'பிடி எலாம் மதம் பெய்திட, பெருங் கவுள் வேழம் ஒடியுமால் மருப்பு; உலகமும் கம்பிக்கும்; உயர் வான் இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும் பெருந்திசை; எவர்க்கும் முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும் |
'பிடி எலாம் - பெண் யானைகளெல்லாம்; மதம் பெய்திட - மதநீரைச் சொரிய; பெருங்கவுள் வேழம் - பெரிய கதுப்புகளையுடைய ஆண் யானைகளின்; மால் மருப்பு ஒடியும் - பெரிய தந்தங்கள் ஒடிந்து விழுகின்றன; உலகமும் கம்பிக்கும் - பூமியும் அதிர்ச்சியடைந்து நடுங்குகின்றது; உயர் வான் இடியும் - ஓங்கிய வானத்திலிருந்து இடிகளும்; வீழ்ந்திடும் - மேலே விழும்; பெருந் திசை எரிந்திடும் - பெரிய திக்குகள் தாமே தீப் பற்றி எரிகின்றன; எவர்க்கும் - (அரக்கர்) எல்லோருக்கும்; முடியின் மாலைகள் - (தம்) தலையின் மேலே அணிந்த பூமாலைகள்; புலாலொடு முழு முடை நாறும் - புலால் நாற்றத்தோடு் மிக்க கெட்ட நாற்றமும் வீசுகின்றன; ஆல் - அசை. பெண் யானைக்கு இயற்கையில் மதம் இல்லை; ஆதலால் அவை மதநீர் பொழிதல் தீ நிமித்தமாகும். பெண் யானைகள் மதநீரைச் சொரிவதும், ஆண்யானைகளின் தந்தங்கள் ஒடிவதும், உலகம் நடுங்குவதும் இடி விழுவதும், திசைகள் தீப் பற்றி எரிவதும், மாலைகள் துர்நாற்றம் வீசுவதும் தீ நிமித்தங்களாம். ஒடியுமால் மருப்பு - 'ஆல்' அசையுமாகும். 72 |