2947. | 'இனைய ஆதலின், "மானிடன் ஒருவன்" என்று, இவனை நினையலாவது ஒன்று அன்று அது;- -நீதியோய்!-நின்ற வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்; புனையும் வாகையாய்! பொறுத்தி, என் உரை' எனப் புகன்றான். |
'இனைய ஆதலின் - இத்தகைய தீ நிமித்தங்கள் நிகழ்வனவாதலால்; இவனை மானிடன் ஒருவன் என்று - இவனை ஒரு (எளிய) மனிதனென்று; நினையல் ஆவது - துச்சமாக நினைப்பது; அது ஒன்று அன்று - பொருந்துவது ஆகாது; நீதியோய் - நீதியையுணர்ந்தவனே!; நின்ற வினை எலாம் செய்து - (நீ) போருக்குரிய தொழில்கள் எல்லாவற்றையும் செய்தாலும்; வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் - வெல்லக் கூடிய (அவ்வளவு) எளிமையுடையவனாக (அவன்) இல்லை; புனையும் வாகையாய் - வெற்றி மாலையுடையவனே; என் உரை பொறுத்தி' - (நான் கூறிய) என்னுடைய இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்வாய்; எனப் புகன்றான் - என்று (அகம்பன்) சொன்னான். இப்பொழுது நிகழ்ந்துள்ள தீநிமித்தங்களைப் பார்த்தால், நீ அரக்கர்களை அணிவகுத்துப் பெரும் போர் செய்தாலும் வெல்ல முடியாதவன் இராமனென்று தோன்றுகிறதென அகம்பன் கரனுக்கு எச்சரிக்கை செய்தான் என்பது. 73 |