அறிவுரையைக் கரன் புறக்கணிக்க, படைகள் போர்மேல் செல்லுதல் 2948. | உரைத்த வாசகம் கேட்டலும், உலகு எலாம் உலையச் சிரித்து, 'நன்று நம் சேவகம்! தேவரைத் தேய அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள், அமர் வேண்டி இரைத்து வீங்குவ, மானிடற்கு எளியவோ?' என்றான்.' |
உரைத்த வாசகம் கேட்டலும் - (இவ்வாறு) அகம்பன் கூறிய வார்த்தைகளைக் கேட்டவுடன்; உலகு எலாம் உலையச் சிரித்து - (கரன்) உலகங்கள் யாவும் நிலை தளர்ந்து நடுங்குமாறு சிரித்து; தேவரைத் தேய அரைத்த - தேவர்களைத் தேய்த்து உருத்தெரியாமல் அரைத்த; அம்மி ஆம் - அம்மிக்கல் என்னும்; அலங்கு எழில் தோள் - அசைந்து விளங்குகிற என் தோள்கள்; அமர் வேண்டி - போரினை விரும்பி; இரைத்து வீங்குவ - பூரித்துப் பெருத்துள்ளன; மானிடற்கு எளியவோ - (அத்தகைய தோள்கள்) ஒரு மனிதனுக்கு எளிமைப் படுவனவோ?; நம் சேவகம் நன்று' - நமது வீரம் நன்றாயிருந்தது; என்றான் - என்று கூறினான். தான் முன்னர்ப் புயவலிமையால் தேவர் பலரை அழித்தமை குறித்துத் 'தேவரைத் தேய அரைத்த அம்மியாம் தோள்' என்றது. தேவர்களை எளிதில் அழித்த நாமோ இம் மனிதனுக்கு அஞ்சுவது? என்று அகம்பன் கூறியதை ஏளனஞ் செய்து கூறியவாறு. நன்றிது : இது - அசைநிலை. இரைத்து வீங்கும் - ஒரு பொருட் பன்மொழி தோளாகிய அம்மிக்கு வலிமையைக் குழவியாகவும், தேவர்களை அரைக்கப்படு பொருளாகவும் கொள்ளுதல் வேண்டும்: ஏகதேசஉருவகம். 74 |