2949. என்னும் மாத்திரத்து, எறி படை
     இடி என இடியா,
மன்னர் மன்னவன் மதலையை,
     வளைந்தன-வனத்து
மின்னும் வால் உளை மடங்கலை,
     முனிந்தன வேழம்
துன்னினாலென, சுடு சினத்து
     அரக்கர்தம் தொகுதி.

    என்னும் மாத்திரத்து - என்று (கரன்) கூறிய அளவில்; வனத்து -
காட்டிலே; மின்னும் வால் உளை மடங்கலை - ஒளி வீசும் தூய பிடரி
மயிர்களையுடைய சிங்கத்தை; முனிந்தன வேழம் - கோபம் கொண்ட பல
யானைகள்; துன்னினால் என - சூழ்ந்து நெருங்கினாற் போல; மன்னர்
மன்னவன் மதலையை -
தசரதச் சக்கரவர்த்தியின் குமாரனான இராமனை;
சுடு சினத்து அரக்கர்தம் தொகுதி - கொதிக்கும் கோபத்தையுடைய
அரக்கர்களின் கூட்டங்கள்; எறிபடை இடி என இடியா - தாக்குகின்ற
படைக் கருவிகளை ஒன்றோடு ஒன்று வீசி இடி போன்ற முழக்கத்தைச்
செய்து கொண்டு; வளைந்தன - சூழ்ந்தன.

     இராமன் ஒருவனால் அரக்கர் கூட்டம் எளிதில் அழிவது குறித்துச் சிங்கத்தை யானைகள் வளைத்தலாகிய இல்பொருள் உவமை கூறினார்.

     அரக்கப் படை வீரர்க்கு யானைகளும், இராம பிரானுக்கு மடங்கலும்
உவமைகள்.                                                 75