படை எலாம் இராம பாணத்தால் அழிதல்

2950. வளைந்த காலையில், வளைந்தது, அவ்
     இராமன் கை வரி வில்;
விளைந்த போரையும் ஆவதும்
     விளம்புதும்; விசையால்,
புளைந்த பாய் பரி புரண்டன;
     புகர் முகப் பூட்கை
உளைந்த, மால் வரை உரும் இடி
     பட ஒடிந்தென்ன.

    வளைந்த காலையில் - (இவ்வாறு அரக்கர் படை இராமனைச்)
சூழ்ந்து கொண்ட போது; அவ் இராமன் கை வரி வில் வளைந்தது -
அந்த இராம பிரானின் கையிலுள்ள கட்டமைந்த வில்லும் (அம்பு தொடுக்க)
வளைந்தது; விளைந்த போரையும் - (அப்பொழுது) நிகழ்ந்த போரினைக்
குறித்தும்; ஆவதும் - அதனால் ஏற்பட்ட முடிவு பற்றியும்; விளம்புதும் -
கூறுவோம்; விசையால் - (இராமபாணங்களின்) வேகத்தால்; பாய் பரி -
பாய்ந்து செல்லும் குதிரைகள்; புளைந்த புரண்டன - துளைபட்டனவாய்க்
கீழே விழுந்து புரண்டன; உரும் இடிபட - பேரிடி விழுவதால்; மால்
வரை ஒடிந்து என்ன -
பெரிய மலைகள் முறிபட்டாற் போல; புகர் முகப்
பூட்கை -
செம்புள்ளிகள் அமைந்த முகங்களையுடைய யானைகள்;
உளைந்த - வருந்திக் கீழே விழுந்தன.

     அரக்கர் சேனை இராமனை வளைந்து கொள்ளவே. அந்த இராமனின்
கை வில்லும் வளைந்தது. அவ் வில்லிலிருந்து அம்பெறிந்த வேகத்தால்
குதிரைகள் புரள, இடியால் முறிந்த மலைகளைப் போல யானைகள்
வருந்தின என்பது. புளைந்த - முற்றெச்சம். பூட்கை - புழைக்கை என்பதின்
மரூஉ; யானையைக் குறிக்கும் சொல்; அன்மொழித்தொகை. இச்சொல்லால்
யானையைக் கம்பர் பின்னும் குறிப்பர் (5588, 5601, 5608) ஆவதும் - கால
வழுவமைதி.                                                76