2951. சூலம் அற்றன; அற்றன சுடர் மழு;
     தொகை வாள்
மூலம் அற்றன; அற்றன முரண்
     தண்டு; பிண்டி-
பாலம் அற்றன; அற்றன பகழி;
     வெம் பகு வாய்
வேலும் அற்றன; அற்றன
     வில்லொடு பல்லம்.

(இராம பாணங்களால் அரக்கர்களின்) சூலம் அற்றன - சூலங்கள்
அறுபட்டன; சுடர் மழு அற்றன - ஒளியைக் கக்கும் மழுவென்னும்
ஆயுதங்கள் அழிந்தன; தொகை வாள் மூலம் அற்றன - பலவாகிய வாட்
படைகள் அடியோடு அறுபட்டன; முரண் தண்டு அற்றன - வலிமையுள்ள
தண்டாயுதங்கள் அறுபட்டன; பிண்டி பாலம் அற்றன - பிண்டி பாலம்
என்னும் படைக் கருவிகள் அழிந்தன; பகழி அற்றன - அம்புகள்
ஒடிந்தன; வெம் பகுவாய் வேலும் அற்றன - கொடிய பிளக்கும்
வாயையுடைய வேல்களும் அழிந்தன; வில்லொடும் பல்லம் அற்றன -
விற்களோடு பல்லம் என்னும் பாண வகைகளும் அழிந்தன.

     பல்லம் - ஒரு வகை அம்பு : பகுவாய் - வினைத்தொகை. அற்றன -
சொற்பொருள் பின்வருநிலையணி.                                77