2952. | தொடி துணிந்தன தோளொடு; தோமரம் துணிந்த; அடி துணிந்தன கட களிறு; அச்சொடு, நெடுந் தேர், கொடி துணிந்தன; குரகதம் துணிந்தன; குல மா முடி துணிந்தன; துணிந்தன, முளையொடு முசலம். |
தொடி துணிந்தன - தொடியென்னும் வீரவளைகள் துண்டு பட்டு விழுந்தன; தோளொடு தோமரம் துணிந்த - கைகளோடு தோமரம் என்னும் ஆயுதங்களும் துண்டாயின; கட களிறு அடி துணிந்தன - மத யானைகளின் கால்கள் துண்டிக்கப்பட்டன; அச்சொடு நெடுந்தேர் - பெரிய தேர்களின் அச்சுக்களோடு; கொடி துணிந்தன - கொடிகளும் துண்டிக்கப் பெற்றன; குரகதம் துணிந்தன - குதிரைகள் துண்டங்களாக வெட்டப்பட்டன; குல மா முடி துணிந்தன - கூட்டமாகிய (யாளி முதலான) மிருகங்களின் தலைகள் துண்டிக்கப் பெற்றன; முசலம் முளையொடு துணிந்தன - உலக்கைகள் தண்டாயுதங்களோடு துணிக்கப்பட்டன. அச்சு - இருசு; முளையொடு - அடியோடு என்றும் பொருளுரைக்கலாம் தோமரம் - தண்டாயுதம் என்பர்; முளை முசலம் என்பது ஒரு வகை ஆயுதமாகும். 78 |