2953. | கருவி மாவொடு, கார் மதக் கைம்மலைக் கணத்து ஊடு- உருவி மாதிரத்து ஓடின, சுடு சரம்; உதிரம் அருவி மாலையின் தேங்கினது; அவனியில் அரக்கர் திரு இல் மார்பகம் திறந்தன; துறந்தன சிரங்கள். |
சுடு சரம் - (இராமபிரான்) ஏவிய கொடிய பாணங்கள்; கருவி மாவொடு - கல்லணை பூண்ட குதிரைகளையும்; கார் மதக் கைம் மலைக் கணத்து - கரிய நிறத்தையும், மதத்தையுமுடைய மலை போன்ற யானைக் கூட்டங்களையும்; ஊடு உருவி மாதிரத்து ஓடின - ஊடுருவி அப்பாலே சென்று திசைகள் எங்கும் விரைந்து சென்றன; உதிரம் அருவி மாலையின் தேங்கினது - இரத்தம் அருவிகளின் ஒழுங்குபோலத் தேங்கி நின்றது; அவனியில் அரக்கர் - பூமியிலே அரக்கர்களின்; திரு இல் மார்பகம் திறந்தன - பொலிவற்ற மார்பிடங்கள் பிளவுபட்டன; சிரங்கள் துறந்தன - தலைகள் துணிக்கப்பட்டு (உடலைவிட்டு) நீங்கின; அந்தப் போரில் இராமனின் கொடிய அம்புகள் குதிரைகளையும், யானைகளையும் ஊடுருவித் திசைகளெங்கும் ஓட, பூமியிலே அரக்கர்களின், மார்பகங்கள் பிளக்கப் படத் தலைகள் துண்டிக்கப்பட்டன; அப்போது உதிரம் அருவியொழுங்கு போல அம்பு பட்ட மிருகங்களின் உடலிலிருந்து பெருகியது என்பது கருவி : குதிரையின் மேலிருக்கை, தவிசு கல்லணை (குதிரைச்சேணம்). மாவொடு, கணத்தொடு - உருபுமயக்கம். திருவின் மார்பகம் என எடுத்து -வீரத்திருமகளையுடைய மார்பு என்றும், திரு வில் என எடுத்து - மேலானஒளியையுடைய என்றும் உரைக்கலாம்; மேலும், திரு இல் மார்பகம்- அரக்கர்களின் வெற்றித் திரு இல்லாத மார்பகம் எனலும் ஆம். 79 |