2954. ஒன்று, பத்து, நூறு, ஆயிரம்,
     கோடி, என்று உணரா    
துன்று பத்திய, இராகவன்
     சுடு சரம் துரப்ப,
சென்று, பத்திரத் தலையின
     மலை திரண்டென்ன,
கொன்று, பத்தியில் குவித்தன
     பிணப் பெருங் குன்றம்.

    ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா - ஒன்று, பத்து,
நூறு, ஆயிரம், இலக்கம், கோடி என்று கணக்கிட்டு அறிய முடியாதபடி;
துன்று பத்திய - நெருங்கின வரிசையாகவுள்ள; சுடு சரம் - நெருப்புப்
போன்ற கொடிய அம்புகளை; இராகவன் துரப்ப - இரகு குலத்தில்
தோன்றிய இராமன் செலுத்த; சென்று - (அந்த அம்புகள்) பகைவர் மேல்
சென்று; கொன்று - அவ்வரக்கர்களைக் கொன்று; பத்திரத் தலையின
மலை -
அம்புகளைத் தலையிற் கொண்ட பல மலைகள்; திரண்டு என்ன-
திரண்டு கிடந்தன போல; பிணப் பெருங் குன்றம் - பெரிய பிணக்
குவியல்களை; பத்தியில் குவித்தன - வரிசையாகக் குவிந்து கிடக்கச்
செய்தன.

     அம்புகள் பொத்திய பிணக் குன்றுகளுக்கு அம்புகள் பாய்ந்துள்ள
மலைகள் உவமையாம்.

     பத்திரம் - அம்பு. நூறாயிரம் - இரட்டுற மொழிதல், நூறும்
ஆயிரமும்; நூறாயிரம் (இலட்சம்) எனக் கொள்க. பத்திரத் தலையின் -
மலைகளின் சிகரங்களை ஒத்தனவாக என்னலுமாம்.                  80