2955.காடு கொண்ட கார் உலவைகள்
     கதழ் எரி கதுவ,
சூடு கொண்டன எனத் தொடர்
     குருதி மீத் தோன்ற,
ஆடுகின்றன அறுகுறை; அயில்
     அம்பு, விண்மேல்
ஓடுகின்றன, உயிரையும்
     தொடர்வன ஒத்த.

    காடு கொண்ட கார் உலவைகள் - வனத்தில் அடர்த்தியாகவுள்ள
கரிய மரக் கிளைகள்; கதழ் எரி கதுவ - மூளுகின்ற நெருப்புப் பற்றிக்
கொள்ள; சூடு கொண்டன என - சூடு பொருந்தின போல; அறுகுறை -
தலையறுபட்ட முண்டங்கள்; தொடர் குருதி மீத் தோன்ற - வழிகின்ற
இரத்தம் மேலே காணப்பட; ஆடுகின்றன - துடித்து ஆடுகின்றன;
விண்மேல் ஓடுகின்றன அயில் அம்பு - (அரக்கர்களின்
உடல்களையறுத்துவிட்டு) ஆகாயத்தின் மேல் விரைந்து செல்லுகின்ற கூரிய
அம்புகள்; உயிரையும் தொடர்வன ஒத்த - (அரக்கர்களின்
உடம்பையழித்து மனநிறைவு கொள்ளாமல் அவர்களின்) உயிரையும்
ஒழிக்கத் தொடர்வன போன்றன.

     தழையில்லாமல் மொட்டையாகவுள்ள மரக்கிளை தலையற்ற
அரக்கர்தம் உடற்குறையையும், அதன் மேல் தீப் பற்றியெரிதல்
அவ்வுடம்பிலிருந்து இரத்தம் பெருகி வருதலையும் போலும் என்றது
தன்மைத் தற்குறிப்பேற்ற வணியாம். அவ்வாறு உடற்குறையான கவந்தம்
ஆடுமாறு அரக்கர்களின் தலைகளையறுத்துச் சென்ற இராமனுடைய
அம்புகள் ஆகாயத்தின் மேற் செல்பவை வீர சுவர்க்கத்துக்குச் சென்ற
அரக்கர் உயிர்களையும் ஒழிப்பதற்குத் தொடர்வன போலும் என்றார் :
இதுவும் தன்மைத் தற்குறிப்பேற்றவணி.

     குருதி எழுந்தமை இராம பாணங்கள் எழுந்தமைக்கு உவமை.    81