2056.கைகள் வாளொடு களம் பட,
     கழுத்து அற, கவச
மெய்கள் போழ்பட, தாள் விழ,
     வெருவிட, நிருதர்
செய்ய மாத் தலை சிந்திட,
     திசை உறச் சென்ற-
தையலார் நெடு விழி எனக்
     கொடியன சரங்கள்

    தையலார் நெடு விழிஎன - மகளிரின் நீண்ட கண்களைப் போல;
கொடியன சரங்கள்- கொடுமையான இராமபாணங்கள்; நிருதர் வெருவிட-
அரக்கர் அஞ்சிடுமாறு; கைகள் வாளொடு - அவர்களின் கைகள்
பிடித்திருந்த வாள்களோடு; களம்பட - போர்க் களத்தில் அறுபட்டு விழ;
கழுத்து அற - கழுத்துக்கள் அறுபட; கவச மெய்கள் போழ்பட -
கவசமணிந்த உடல்கள் பிளவுபட; தாள் விழ - கால்கள் அற்றுவிட; செய்ய
மாத்தலை சிந்திட -
(அவர்களுடைய) சிவந்த பெரிய தலைகள் சிதறிவிழ;
திசை உறச் சென்ற - (செய்து) திக்குகளின் எல்லையை அளாவ அப்பாற்
சென்றன.

     இராம பாணங்களுக்குத் தையலார் விழி உவமானமாயிற்று :
உவமானத்தை உவமேயமாகக் கூறியதால்; எதிர்நிலையணி மகளிரின்
கண்களைப் போன்று கூரியனவும், பெருந் துயரை விளைப்பனவுமான இராம
சரங்கள், அரக்கரின் வாளேந்திய கைகளும் கால்களும் அற்று விழவும்,
கவசமணிந்த உடல்கள் பிளவுபடவும், கழுத்துக்கள் அறுபடவும், தலைகள்
சிதறவும் செய்து திசையுறச் சென்றன என்றவாறு.                    82