2957. | மாரி ஆக்கிய வடிக் கணை, வரை புரை நிருதர் பேர் யாக்கையின் பெருங் கரை வயின்தொறும் பிறங்க, ஏரி ஆக்கின; ஆறுகள் இயற்றின; நிறையச் சோரி ஆக்கின; போக்கின, வனம் எனும் தொன்மை. |
வரை புரை நிருதர் - மலைகளையொத்த அரக்கர்களின்; பேர் யாக்கையின் - பெரிய உடல்களாகிய; பெருங்கரை - பெரிய கரைகள்; வயின்தொறும் பிறங்க - பக்கங்களிலெல்லாம் விளங்க; ஏரி ஆக்கின - (வெற்றிடமான அங்கு) ஏரிகளின் தோற்றத்தைச் செய்தனவும்; ஆறுகள் இயற்றின - நதிகளின் தோற்றத்தை உண்டாக்கினவுமாகி; (அப்போது); மாரி ஆக்கிய - (இடைவிடாது சொரிவதால்) மழையின் தோற்றத்தைச் செய்த; வடிக் கணை - கூரிய இராம சரங்கள்; நிறையச் சோரி ஆக்கின - (ஏரியும் ஆறும் போன்ற வெற்றிடங்களை) நிறையும்படி இரத்தத்தைப் பெருகச் செய்தன (இவ்வாறு செய்ததால்); வனம் எனும் தொன்மை போக்கின - (தண்டக வனங்களின்) காடுகள் என்ற பழைய தன்மையை நீக்கிவிட்டன. இராமசரத்தால் இறந்து வீழ்ந்த அரக்கருடல்கள் ஏரிகளின் கரை போலவும், ஆறுகளின் கரை போலவும் அமைந்து இரு கரைகளுக்கும் இடைப்பட்ட இடங்களை நீரற்ற ஏரியின் உள்ளிடங்கள் போலவும், ஆற்றின் உள்ளிடம் போலவும் காணப்படும் தோற்றத்தையுண்டாக்க, இராம பாணங்கள் மழை போலப் பெய்து இரத்தப் பெருக்கையுண்டாக்கி, அந்த ஏரிகளையும் யாறுகளையும் நிரப்பின என்பது. தொடர்புயர்வு நவிற்சியணி. மழை பெய்து ஆறு ஏரி நிரம்புமாதலின் அது கணை மழையாகக் கூறப்பெற்றது. 83 |