2958. அலை மிதந்தன குருதியின்
     பெருங் கடல், அரக்கர்
தலை மிதந்தன; நெடுந்
     தடி மிதந்தன; தடக் கைம்-
மலை மிதந்தன; வாம் பரி
     மிதந்தன; வயப் போர்ச்
சிலை மிதந்தன; மிதந்தன,
     கொடி நெடுந் தேர்கள்.

    (அப்பொழுது) அலை மிதந்தன - அலைகள் பொங்கி
மேலெழுந்தனவாயின; குருதியின் பெருங்கடல் - அந்தப் பெரிய இரத்தக்
கடலில்; அரக்கர் தலை மிதந்தன - அரக்கர்களின் தலைகள் மிதந்தன;
நெடுந்தடி மிதந்தன - பெரிய தசைத் துண்டுகள் மிதந்தன, தடக்கைம்
மலை மிதந்தன -
பெரிய துதிக்கைகளையுடைய யானைகள் மிதந்தன;
வாம் பரி மிதந்தன - தாவிச் செல்லும் குதிரைகள் மிதந்தன; வயப்
போர்ச் சிலை மிதந்தன -
வலிய போருக்குரிய விற்கள் மிதந்தன; கொடி
நெடுந் தேர்கள் மிதந்தன -
கொடிகளோடு நீண்ட தேர்கள் மிதந்தன.

     அந்தப் போரில் இராமனின் கூரிய அம்புகள் உண்டாக்கிய இரத்தக்
கடலில் அரக்கர் தலைகள் முதலாயின மிதந்தன என்பது. தும்பிக்கையுடைய
யானையைக் கைம்மலை என்றார். மிதந்தன : சொற்பின்வருநிலையணி.  84