2959. | ஆய காலையில், அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர், தீய வார் கணை முதலிய தெறு சினப் படைகள், மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம் தூய தாரைகள் சொரிவன ஆம் என, சொரிந்தார். |
ஆய காலையில் - அவ்வாறானபோது; இகல் அரக்கர் - வலிமையுடைய அரக்கர் (பலர்); அனல் விழித்து - நெருப்புப் பொறி சிதறக் கோபத்தோடு விழித்துப் பார்த்து; ஆர்த்து - ஆர்ப்பரித்து; மேய மால் வரை ஒன்றினை - நிலைபொருந்திய பெரிய மலையொன்றினை; வளைத்தன மேகம் - சூழ்ந்த மேகங்கள்; தூய தாரைகள் சொரிவன ஆம் என - வெண்மையான மழைத் தாரைகளைப் பொழிவன போல; தீய வார் கணை முதலிய - கொடிய நீண்ட அம்புகள் முதலான; தெறு சினப் படைகள் - பகையழிக்கும் உக்கிரமுள்ள ஆயுதங்களை; சொரிந்தார் - (இராமன்மேல்) பொழிந்தார்கள். மலை இராமபிரானுக்கும் இன மேகம் அரக்கர்களுக்கும் மழைத் தாரைகள் ஆயுதங்களுக்கும் உவமைகளாம். இந்த உவமையால், மேகங்கள் திரண்டு சூழ்ந்து எவ்வளவு மழை பொழிந்தாலும் அது மலைக்கு எந்தவொரு தீங்கினையும் செய்யாதது போல, அரக்கர் திரண்டு சூழந்து எறிந்த படைகள் இராமனுக்கு எந்த ஊறுபாடும் செய்யமாட்டாமை விளங்கும். படைகளையேந்தியவரின் சினத்தை அப் படைகளின் மேலேற்றித் 'தெறு சினப் படை' என்றார் : உபசாரவழக்கு. 85 |