| 2960. | சொரிந்த பல் படை துணிபட, துணிபட, சரத்தால் அரிந்து போந்தன சிந்திட, திசை திசை அகற்றி, நெரிந்து பார்மகள் நெளிவுற, வனம் முற்றும் நிறைய, விரிந்த செம் மயிர்க் கருந் தலை மலை என வீழ்த்தான். |
சொரிந்த பல்படை - (இராமபிரான்) (அரக்கர் தன்மேல்) பொழிந்த பலவகை ஆயுதங்களையும்; துணிபட, துணிபட - பல துண்டுகளாகத் துண்டுபடும்படி; சரத்தால் அரிந்து - (தான் எய்யும்) அம்புகளால் அறுத்துத் தள்ளி; போந்தன - மற்றும் மேல் வந்த ஆயுதங்களை; திசை திசை சிந்திட - எல்லாத் திசைகளிலும் சிதறும்படி; அகற்றி - (தன்னுடைய அம்புகளால்) விலக்கி; பார்மகள் நெரிந்து நெளிவு உற - பூமிதேவி நொறுங்கி அதிக பாரத்தால் நெளியவும்; வனம் முற்றும் நிறைய - அக் காடு முழுவதும் நிரம்பவும்; விரிந்த செம்மயிர் கருந்தலை - படர்ந்த செம்பட்டை மயிர்களையுடைய அந்த அரக்கர்களின் பெரிய தலைகளை; மலை என வீழ்த்தான் - அறுத்துத் தள்ளிய மலை போலக் கீழே வீழ்த்தினான். இராமபிரான் அரக்கர் பொழிந்த பல படைகளையும் தன் அம்புகளால் விலக்கிவிட்டுப் பின்பு பெரும் பாரத்தால் பூமிதேவியின் முதுகு நெளியும்படியும். அக் காடெல்லாம் நிரம்பும்படியும் அரக்கர்களின் கருந்தலைகளை மலைகள் போல் தோன்றும்படி தன் அம்புகளால் கொய்து வீழ்த்தினான் என்பது : துணிபட துணிபட என்ற அடுக்கு - மிகுதியை விளக்குவது. திசை திசை - 'அடுக்கு' எண்ணுப் பொருளது. பார் மகள் நெரிந்து நெளிவுற்றது : அரக்கர்களின் தலைகள் விழுந்த அதிர்ச்சியாலும், அவற்றின் பார மிகுதியாலும் நெளிதல் இயல்பு. 86 |