2961. | கவந்தபந்தங்கள் களித்தன, குளித்த கைம்மலைகள், சிவந்து பாய்ந்த வெங் குருதியில்; திருகிய சினத்தால் நிவந்த வெந் தொழில் நிருதர்தம் நெடு நிணம் தெவிட்டி, உவந்த, வன் கழுது; உயிர் சுமந்து உளுக்கியது உம்பர். |
(அப்பொழுது) கவந்த பந்தங்கள் - தலையற்ற குறையுடல் தொகுதிகள்; களித்தன - கூத்தாடின; கைம் மலைகள் - யானைகள்; சிவந்து பாய்ந்த வெங் குருதியில் - செந்நிறமாகப் பெருகிய வெப்பமான இரத்த வெள்ளத்தில்; குளித்த - மூழ்கின; வன் கழுது - வலிய பேய்கள்; திருகிய சினத்தால் - கடுமையான கோபத்தால்; நிவந்த வெம் தொழில் நிருதர்தம் - மேலோங்கிய கொடுஞ் செயலையுடைய அரக்கர்களின்; நெடுநிணம் தெவிட்டி - மிக்க கொழுப்பைத் தெவிட்டும்படி நிரம்ப உண்டு; உவந்த - மகிழ்ந்தன; உம்பர் - தேவருலகம்; உயிர் சுமந்து - (இறந்த அரக்கர்களின்) உயிர்களை மிகுதியாகத் தாங்கி; உளுக்கியது - (சுமையைப் பொறுக்க மாட்டாமல்) உடல் நெளிந்தது. இராம பாணங்களால் அரக்கர் பெருந்திரளாக மடிந்து விழ, உடற் குறைகளாகிய கவந்தங்கள் கூத்தாட, பெருகிய இரத்தப் பெரு வெள்ளத்தில் யானைகள் மூழ்கின; பேய்கள் அரக்கர்களின் கொழுப்புகளைத் தின்று மகிழ்ந்தன; வீர சுவர்க்கம் செல்லும் அரக்க வீரர்களின் உயிர்களைத் தாங்க மாட்டாது தேவருலகம் உடல் நெளிந்தது என்பது. தெவிட்டுதல் : விரும்பப்படாது மிகுதல் உளுக்குதல் : நெளிதல். வேறு உரை : நிணந்தெவிட்டி உவந்த வன்கழுது - கொழுப்பினிடம் மிக்க விருப்பம் கொண்டு உண்டு மகிழ்ந்த பேய்க் கூட்டங்கள்; உயிர் சுமந்து - (அளவுக்கு அதிகமாக உண்டாதல் வயிறு பருத்த தம்முடைய உடம்பைச் சுமக்க முடியாமல்) பெருமூச்சு விட்டு; உம்பர் உளுக்கியது - ஆகாயத்தில் அசைந்து சென்றன. 87 |