2962.மருள் தரும் களி வஞ்சனை வளை
     எயிற்று அரக்கர்,
கருடன் அஞ்சுறு, கண் மணி
     காகமும் கவர்ந்த;
இருள் தரும் புரத்து இழுதையர்
     பழுது உரைக்கு எளிதோ?
அருள் தரும் திறத்து அறன்
     அன்றி, வலியது உண்டாமோ?

     மருள் தரும் - மாயையைச் செய்கின்ற; களி வஞ்சனை - களிப்பும்
வஞ்சனையுமுள்ள; வளை எயிற்று அரக்கர் - வளைந்த கோரமான
பற்களையுடைய இராக்கதர்களின்; கருடன் அஞ்சுறு கண்மணி - கருடனும்
காண அஞ்சும்படியான கண்களின் கருவிழிகளை; காகமும் கவர்ந்த -
(இப்பொழுது) காக்கைகளும் பறித்தெடுத்தன; இருள் தரும் புரத்து
இழுதையர் -
இருளைப் போன்ற மிகக் கரிய உடம்பையுடைய
வஞ்சகர்களிடம்; பழுது உரைக்கு - கேடு சொல்வதற்கு; எளிதோ -
எளியது ஆகுமோ; அருள் தரும் திறத்து - கருணை செய்யும்
தன்மையையுடைய; அறன் அன்றி - தருமமேயல்லாமல்; வலியது -
வலிமையுடையது; உண்டாமோ - (உலகத்தில் வேறு) உள்ளதாகுமோ?

     உயிர்களுக்குத் தருமத்தினும் மிக்க நன்மை தருவதும், அதருமத்தினும்
மிக்க கேடு தருவதும் வேறு இல்லையாதலால் கொடியவரான அரக்கர்
எளிதாக அழிவடைந்தனர் என்பது.

     'அருள் தரும் திறத்து அறனன்றி வலியது உண்டாமோ' -
இராமபிரானே வெற்றி பெற்றமையைத் தெரிவிப்பது : பிறிது மொழிதலணி.
'இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ' - வேற்றுப்
பொருள் வைப்பணி. காகமும் - உம் : இழிவு சிறப்பும்மை. அறத்துக்கு
அருள் மிக இன்றியமையாததால் 'அருள் தரும் திறத்து அறன்'
எனப்பட்டது.                                                 88