கலிவிருத்தம் 2963. | பல் ஆயிரம்இருள் கீறிய பகலோன் என ஒளிரும் வில்லாளனை முனியா, வெயில் அயில் ஆம் என விழியா,- கல் ஆர் மழை, கண மா முகில் கடைநாள், விழுவனபோல்,- எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார்; வினை செய்தார். |
(இவ்வாறு அரக்கரையழித்து) பல் ஆயிரம் இருள் - மிகப் பலவாகிய இருளின் தொகுதியை; கீறிய பகலோன் என ஒளிரும் - பிளந்து அழித்த சூரியனைப் போல ஒளி வீசுகின்ற; வில்லாளனை - வில்லில் வல்லவனான இராமபிரானை; (மற்றும் பல அரக்கர்); முனியா - கோபித்து; வெயில் அயில் ஆம் என விழியா - ஒளியையுடைய வேலைப் போலக் கூர்மையாகக் கண் விழித்துப் பார்த்து; கண மா முகில்- கூட்டமாகிய பெரிய மேகங்கள்; கடை நாள் - யுக முடிவுக் காலத்தில்; கல் ஆர் மழை - கற்களைப் போன்ற மழை; விழுவன போல் - சொரிவது போலத் தோன்றுமாறு; எல்லாம் ஒரு தொடையா - எல்லா வகை அம்புகளையும் ஒரே தொடர்ச்சியாக; உடன் எய்தார் - சேர்த்து எய்து; வினை செய்தார் - போர்த் தொழிலைச் செய்தார்கள். பல்லாயிரம் இருள் போரில் இறந்துபட்ட பல்லாயிரம் அரக்கர்களுக்கும், பகலவன் இராமனுக்கும் கல் மழை அம்பு பொழிதலுக்கும் மேகக் கூட்டம் அரக்கர் கூட்டத்துக்கும் உவமை. முனியா, விழியா செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். 89 |