2964. | எறிந்தார் என, எய்தார் என, நினைந்தார் என, எறிய அறிந்தார் என, அறியாவகை, அயில் வாளியின் அறுத்தான்; செறிந்தாரையும், பிரிந்தாரையும், செறுத்தாரையும், சினத்தால் மறிந்தாரையும், வலித்தாரையும், மடித்தான்- சிலை பிடித்தான். |
சிலை பிடித்தான் - வில்லைக் கையில் ஏந்தியவனான இராம பிரான்; செறிந்தாரையும் - கூட்டமாகத் திரண்டு வந்த அரக்கர்களையும்; பிரிந்தாரையும் - தனித் தனியே எதிர்த்து வந்த அரக்கர்களையும்; செறுத்தாரையும் - மிகக் கோபித்துப் பகைத்த அரக்கர்களையும்; சினத்தால் மறிந்தாரையும் - (தோற்றோடிப் பின்பு) கோபத்தால் திரும்பி வந்த அரக்கர்களையும்; வலித்தாரையும் - வலிந்து போர் செய்ய வந்தவர்களையும் (ஆகிய அனைவரையும்); எறிந்தார் என - இன்னவர் வேல் முதலிய எறிபடைகளை வீசினவர்களென்றும்; எய்தார் என - இன்னார் பாணங்களைப் பிரயோகித்தவரென்றும்; நினைந்தார் என - (இன்னார் ஆயுதங்களைப் பயன்படுத்தக்) கருதினவரென்றும்; எறிய அறிந்தார் என - (இன்னார் ஆயுதங்களை) வீச ஆராய்ந்து துணிந்தவரென்றும்; அறியாவகை - அறியாதபடி; அயில் வாளியின் அறுத்தான் - கூர்மையான (தன்னுடைய) அம்புகளால் துணித்து; மடித்தான் - கொன்றொழித்தான். சிலை பிடித்தவன் அறுத்தான் மடித்தான் என்று வினை முடிவு செய்க. இன்ன அரக்கர் இன்ன விதமாக இன்னது செய்தாரென்று அறிய முடியாதபடி அவர்களையெல்லாம் மிக விரைவில் இராமபிரான் துணித்தான் என்பது. செறிந்தார் - தன்னைச் சூழ்ந்து நெருங்கி நின்றவரும், பிரிந்தார் - விலகித் தூரத்தில் நின்றவரும் எனவும் உரைக்கலாம். 90 |