2965.வானத்தன; கடலின் புற
     வலயத்தன; மதி சூழ்
மீனத்தன; மிளிர் குண்டல
     வதனத்தன மிடல் வெங்
கானத்தன; மலையத்தன; திசை
     சுற்றிய கரியின்
தானத்தன-காகுத்தன் சரம்
     உந்திய சிரமே.

     மிளிர் குண்டல வதனத்தன - விளங்குகின்ற குண்டலம் என்னும்
காதணியைக் கொண்ட முகத்தையுடையனவும்; காகுத்தன் சரம் உந்திய
சிரம் -
இராமபிரானின் அம்புகளால் அறுத்துத் தள்ளப் பட்டனவுமாகிய
தலைகள்; வானத்தன - மேக மண்டலத்தில் சென்று சேர்ந்தவையும்;
கடலின் புற வலயத்தன - கடலின் வெளிவட்டத்திற் சென்று
சேர்ந்தவையும்; மதி சூழ் மீனத்தன - சந்திரனைச் சூழ்ந்த நட்சத்திர
மண்டலங்களிற் சென்று சேர்ந்தவையும்; மிடல் வெம் கானத்தன - வலிய
கொடிய காடுகளில் சென்று சேர்ந்தவையும்; மலையத்தன - மலைகளிற்
சென்று சேர்ந்தவையும்; திசை சுற்றிய கரியின் - திசைகளைச்
சுற்றிலுமுள்ள (எட்டுத் திக்கு) யானைகளிடத்தில்; தானத்தன - சென்று
சேர்ந்தவையுமாயின. ஏ - ஈற்றசை.

     அறுபட்ட தலைகள் எப்புறத்தும் நெடுந் தூரத்திற்கு அப்பால் சென்று
விழுந்தன என்பது மீன் - விண்மீன்; வானத்தன, வலயத்தன - அ -
ஆறனுருபு.                                                   91