2966. | மண் மேலன; மலை மேலன; மழை மேலன; மதி தோய் விண் மேலன; நெடு வேலையின் மேல் கீழன; மிடலோர் புண் மேலன;-குருதிப் பொரு திரை ஆறுகள் பொங்க, திண் மேருவை நகு மார்பினை உருவித் திரி சரமே. |
புண் மேலன குருதி - புண்பட்ட உடல்களிலிருந்து பெருகும் இரத்த வெள்ளமாகிய; பொரு திரை ஆறுகள் பொங்க - மோதுகின்ற அலைகளையுடைய நதிகள் மிகும்படியாக; மிடலோர் - வலிமையுள்ள அரக்கர்களின்; திண் மேருவை நகு மார்பினை - வலிய மேருமலையையும் (தமது வலிமைக்கு ஈடாகாதென்று) இகழ்கின்ற மார்புகளை; உருவித் திரி சரம் - முழுவதும் துளைத்து அப்பாலே சென்ற இராமனுடைய அம்புகள்; மண் மேலன - தரையில் விழுந்தவையும்; மலை மேலன - மலைகளின் மேல் விழுந்தவையும்; மழை மேலன - மேகங்களின் மேற்பட்டவையும்; மதி தோய் விண் மேலன - சந்திரன் பொருந்தி விளங்கும் ஆகாயத்தின் மேல் சென்றவையும்; நெடு வேலையின் மேல் கீழன - பெரிய கடல்களின் மேலேயும் கீழேயும் உள்ளவையுமாயின; ஏ - ஈற்றசை. இரத்த நதிகள் பெருகுமாறு அரக்கர்களின் மார்புகளை ஊடுருவிச் சென்ற இராம பாணங்கள் மண்மேலன, மலை மேலன, மழை மேலன, விண் மேலன, வேலையின் மேல் கீழனவாக அமைந்தன என்பது. இச் செய்யுள் இராமனின் அம்புகள் பகைவர் தம் உடல்களை ஊடுருவிச் சென்ற வேகத்தின் மிகுதியை விளக்கும். அரக்கர்கள் மார்புகளுக்கு மேருமலை ஒப்பு - அதன் திண்மையும் பெருமையும் பற்றி. அரக்கர் மார்பு பொழியும் குருதிக்கு மலையருவி நிகர். 92 |