2967. | பொலந் தாரினர், அனலின் சிகை பொழி கண்ணினர், எவரும் வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார், சர மழையால் உலந்தார்; உடல் கடலோடு உற, உலவா உடல் உற்றார்; 'அலந்தார் நிசிசரர் ஆம்' என, இமையோர் எடுத்து ஆர்த்தார். |
பொலம் தாரினர் - அழகிய மாலையணிந்தவர்களும்; அனலின் சிகை பொழி கண்ணினர் - நெருப்பின் சுடர்களைச் சிந்துகின்ற கண்களையுடையவர்களும்; வலம் தாங்கிய - வலிமை கொண்ட; வடி வெம் படை விடுவார் எவரும் - கூரிய கொடிய போர்க் கருவிகளை இராமன் மேல் விடுபவர்களான அரக்கர்கள் யாவரும்; சர மழையால் உலந்தார் - (இராமன் எய்த) அம்பு மழையால் இறந்தனர்; உடல் கடலோடு உற - அவ்வாறு இறந்தோர் தம் உடல்கள் கடலோடு போய்ச் சேர; உலவா உடல் உற்றார் - (பின்) அழியாத தேவ உடலைப் பெற்றார்கள்; இமையோர் - (அதனால்) தேவர்கள்; நிசிசரர் அலந்தார் ஆம் என ஆர்த்தார் - அரக்கர்கள் அழிந்தார்களென்று மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள். நிசிசரர் - அரக்கர் : இரவில் சஞ்சரிப்பவர். 93 |