2968. | ஈரல் செறி கமலத்தன, இரதத் திரள் புளினம், வீரக் கரி முதலைக் குலம், மிதக்கின்றன உதிக்கும் பாரக் குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா, மூரித் திரை உதிரக் குளம் முழுகிக் கழுது எழுமே. |
ஈரல் செறி கமலத்தன- (இறந்த அரக்கர்களின்) ஈரல்களாகிய நிறைந்த தாமரை மலர்களையுடையவையும்; இரதம் திரள் புளினம் - தேர்களாகிய திரண்ட மணற்குன்றுகளையுடையவை; வீரக் கரி - வலிய யானைகளாகிய; முதலைக் குலம் - முதலைகளின் கூட்டம்; மிதக்கின்றன - மிதக்கப் பெற்றவையும்; பாரம் குடர் - கனத்த குடல்களாகிய; மிடை பாசடை - நெருங்கிய பசுமையான தாமரையிலைகள்; படர்கின்றன - மேலே படரப் பெற்றவையுமாகிய; மூரித் திரை உதிரம் குளம் பல - பெரிய அலைகளையுடைய இரத்தக் குளங்கள் பல; கழுது முழுகி எழ - பேய்கள் முழுகி நீராடி எழுமாறு; உதிக்கும் - உண்டாயின. பெரிய இரத்த வெள்ளத்தைப் பேய்கள் நீராடியெழுவதற்கு இடமான தாமரைப் பொய்கைகளென்று உருவகப்படுத்தி, அவற்றிற்குக் குடல்களைத் தாமரையிலைகளாகவும், ஈரல்களைத் தாமரை மலர்களாகவும் தேர்களை மணற் குன்றுகளாகவும், யானைகளை முதலைகளாகவும் குறித்து வருணித்தார். முற்றுவமையணி. 94 |