2969. அழைத்தார் சிலர், அயர்த்தார் சிலர்,
     அழிந்தார் சிலர், கழிந்தார்;
உழைத்தார் சிலர், உயிர்த்தார் சிலர்,
     உருண்டார் சிலர், புரண்டார்;
குழைத் தாழ் திரைக் குருதிக் கடல்
     குளித்தார் சிலர், கொலை வாய்
மழைத் தாரைகள் படப் பாரிடை
     மடிந்தார் சிலர், உடைந்தார்.

    கொலை வாய் மழைத் தாரைகள் பட - (பகைவரைக்) கொல்லும்
தன்மையுடைய கூரிய நுனியுள்ள (இராமனுடைய) அம்புகளாகிய மழைத்
தாரைகள் மேல் விழுவதனால்; சிலர் அழைத்தார் - (அரக்கர்களில்) சில
பேர் (துன்பம் பொறுக்க மாட்டாமல் ஐயா அப்பா என்று)
கூவியழைத்தார்கள்; சிலர் அயர்த்தார் - சிலர் சோர்ந்து தளர்ந்தார்கள்;
சிலர் அழிந்தார் - சிலர் இறந்தொழிந்தார்கள்; (சிலர்) கழிந்தார் -சிலர்
நெடுந்தொலைவு விலகிச் சென்றார்கள்; சிலர் உழைத்தார் - சிலர் மிக
வருந்தினார்கள்; சிலர் உயிர்த்தார் - சிலர் பெருமூச்சு விட்டனர்; சிலர்
உருண்டார் -
சிலர் (தரையிலே) உருண்டார்கள்; (சிலர்) புரண்டார் - சிலர்
(தரையிலே) புரண்டு தத்தளித்தனர்; சிலர் குழை தாழ் - சிலர் சேறு
ஆழ்ந்து; திரைக் குருதிக் கடல் குளித்தார் - அலைகளோடு கூடிய
இரத்தக் கடலில் மூழ்கினார்கள்; சிலர் பார் இடை மடிந்தார் - சிலர்
தரையிலே விழுந்து இறந்தார்கள்; (சிலர்) உடைந்தார் - சிலர் உறுதிநிலை
கெட்டு ஓடினார்கள்.

     அரக்க வீரர் பலரும் இராமனுடைய அம்புகளால் பலபடி,
ஆயினமையை இச் செய்யுள் புலப்படுத்தும். 'கொலைவாய்' என்ற
அடைமொழியால் 'மழை' அம்புமழையாயிற்று.

     முன் செய்யுளில் குருதிக் குளமாகவிருந்தது இச் செய்யுளில் குருதிக்
கடலாகப் பொங்கியது என்பது.                                 95