2971. | நாகத் தனி ஒரு வில்லியை, நளிர் முப்புரர், முன் நாள் மாகத்திடை வளைவுற்றனர் என, வள்ளலை மதியார், ஆகத்து எழு கனல் கண்வழி உக, உற்று எதிர் அழன்றார்; மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார், செரு விளைத்தார். |
நாகத் தனி ஒரு வில்லியை - மேருமலையை ஒப்பற்ற வில்லாகக் கொண்ட சிவபெருமானை; முன்நாள் - முன்னொரு காலத்தில்; மாகத்திடை வளைவுற்றனர் - ஆகாயத்தில் சூழ்ந்து கொண்டவர்களான; நளிர் முப்புரர் என - பெரிய திரிபுரத்து அசுரர்களைப் போல (அச் சேனைத் தலைவர் பதினால்வரும்); வள்ளலை மதியார் - இராமபிரானை (ஒரு பொருட்டாக) மதியாதவர்களாய்; ஆகத்து எழு கனல் - அவர்களுடைய உடலிலிருந்தெழுந்த கோபத் தீ; கண் வழி உக - கண்களின் வழியாகச் சிந்தும்படி; எதிர் உற்று அழன்றார் - எதிர்த்து வந்து சீற்றம் கொண்டவர்களாய்; மேகத்தினை நிகர் - காள மேகத்தைப் போன்ற; வில்லியை வளைத்தார் - வில் வீரனான இராம பிரானைச் சூழ்ந்து கொண்டு; செரு விளைத்தார் - போர் செய்தார்கள். முன் காலத்தில் திரிபுரத்து அசுரர்கள் சிவபெருமானை வளைத்துக் கொண்டு செரு விளைத்தது போலச் சேனைத் தலைவர் பதினால்வர் இராமபிரானை வளைத்துக் கொண்டு போர் விளைத்தார் என்பது. தனி வில்லி - வேறு துணை எதுவுமில்லாமல் தனித்துப் போருக்குச் சென்ற வில் வீரன். இராமனுக்கு மேகம் - கருநிறத்தாலும், (அம்பு) மழை பொழிவதாலும், வில்லைப் பெற்றிருப்பதாலும் உவமையாகும். முப்புரம் : இரும்பாலும் செம்பாலும் பொன்னாலும் அமைந்து, நினைத்த இடத்திற்கு எழுந்து பறக்கக் கூடிய சக்தியமைந்த கோட்டைகளால் அமைந்த ஊர்கள்; இம் முப்புரங்களையும் அவற்றிற்குரிய வித்யுந்மாலி, தாருகாட்சன் கமலாட்சன் என்னும் மூன்று அசுரர்களையும் சிவபிரான் தன் சிரிப்பால் தீயெழச் செய்து அழித்தான் என்பது புராண வரலாறு. சிவனின் பெருமையறியாமல் அவனை எதிர்த்துப் பின்பு அழிந்த திரிபுரர் போல அரக்கர் படைகள் இராமனை வளைத்து நின்று அழிவுற்றனர் என்பது குறிப்பு. நாகம் : பல பொருள் குறித்த திரிசொல்; இங்கு மலையைக் குறிக்கும். 97 |