2972. எய்தார் பலர்; எறிந்தார் பலர்;
     மழு ஓச்சினர்; எழுவால்
        பொய்தார் பலர்; புடைத்தார் பலர்;
     கிடைத்தார் பலர்; பொருப்பால்
பெய்தார் மழை; பிதிர்த்தார் எரி;-பிறை
     வாள்எயிற்று அரக்கர்-
வைதார் பலர்; தெழித்தார் பலர்; மலை
     ஆம் என வளைத்தார்.

    பிறை வாள் எயிற்று - பிறைச் சந்திரனைப் போன்ற கோரப்
பற்களையுடைய; அரக்கர் பலர் - (சேனைகளுடன் வந்த) அரக்கர்களில்
அநேகம் பேர்; எய்தார் - (இராமன்மேல்) அம்புகளை எய்தார்கள். பலர்
எறிந்தார் -
(வேல் முதலிய ஆயுதங்களை) வீசினார்கள்; (பலர்) மழு
ஓச்சினர் -
(பலர்) மழுவென்னும் ஆயுதங்களைச் செலுத்தினார்கள்; பலர்
எழுவால் பொய்தார் -
பலர் வளைதடிகளால் தாக்கினார்கள்; பலர்
புடைத்தார் -
பலர் ஆயுதங்களால் அடித்தார்கள்; பலர் கிடைத்தார் -
பலர் எதிர்த்து நெருங்கினார்கள்; பொருப்பால் மழை பெய்தார் -
மலைகளையெடுத்து மழை போலச் சொரிந்தார்கள் பலர்; எரி பிதிர்த்தார் -
பலர் நெருப்பைக் கொட்டினார்கள்; பலர் வைதார் - பலர் வசை
மொழிகளைக் கூறினார்கள்; பலர் தெழித்தார் - பலர் அதட்டியார
வாரித்தார்கள்; மலை ஆம் என வளைத்தார் - (இவ்வாறு செய்து
யாவரும்) மலைகள் சூழ்ந்தாற் போல (இராமனைச்) சூழ்ந்தார்கள்.

     கிடைத்தார் - நெருங்கினர். பொய்தார் - (போர்க் கருவிகளைக்
கொண்டு) விளையாடினார் என்றும் கொள்ளலாம்.                  98