2974.மால் பொத்தின மறவோர் உடல் மழை
     பொத்தின; வழி செம்-
பால் பொத்தின, நதியின் கிளர் படி
     பொத்தின; படர் வான்-
மேல் பொத்தின குழு விண்ணவர் விழி
     பொத்தினர்; விரை வெங்
கால் பொத்தினர் நமன் தூதுவர், கடிது
     உற்று, உயிர் கவர்வார்.

    மால் பொத்தின - மயக்கம் நிறைந்த; மறவோர் உடல் - கொடிய
அரக்கர்களின் உடம்பில்; மழை பொத்தின - அம்பு மழை துளைத்தன;
வழி செம்பால் பொத்தின - வழிகின்ற இரத்தப் பெருக்கு நிறைந்ததுவாய்;
நதியின் கிளர்படி பொத்தின - ஆறுகள் போல விளங்கும் பூமியை
மறைத்தது; படர் வான் மேல் பொத்தின - பரந்த வானத்தின் மேல்
நிறைந்த; குழு விண்ணவர் - கூட்டமாகவுள்ள தேவர்கள்; விழி
பொத்தினர் -
(போரின் உக்கிரத்தைக் காண விரும்பாமல்) கண்களை
மூடிக் கொண்டார்கள்; நமன் தூதுவர் - யமதூதர்கள்; விரை வெங்கால்
பொத்தினர் -
விரைவாக வீசும் கொடிய காற்றையொத்தவர்களாய்; கடிது
உற்று -
விரைவாக வந்து; உயிர் கவர்வார் - அரக்கருயிரைப்
பறிப்பவர்களாயினர்.

     வீரர்களை மலைகளுக்கு உவமித்ததற்கேற்ப, அவர்களின்
உடல்களிலிருந்து பெருகியோடும் இரத்த வெள்ளத்தை நதிகளாகக் கூறினார்.

     நமன் தூதுவர் தூது பொருந்தியது - அவர்களின் மிகுதியையும்,
அவர்களின் கால்களால் அந்தப் போர்க்களம் மூடுண்டதையும்
அரக்கர்களின் அழிவு மிகுதியையும் அறிவிப்பது.

     பொத்துதல் - நிறைதல், மறைதல், மூடுதல் மழை - மழை போல்
சொரிந்த அம்புத் தொகுதி : உவமையாகுபெயர். செம்பால் - இரத்தம்.

     'விரை வெங்கால் பொத்தினர் கடிதுற்று' - 'விரைந்து செல்லும்
தன்மையுள்ள கொடிய தம் கால்களை அடித்துக் கொண்டு விரைந்து வந்து'
எனப் பொருள் உரைப்பினும் அமையும்.                          100