2975.பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து
     ஏறினர் பில வாய்,
நாய் ஏறின; தலைமேல் நெடு நரி
     ஏறின; எரி கால்
வாய் ஏறின வடி வாளியின் வான்
     ஏறினர், வந்தார்;
தீ ஏறு, இகல் அரி ஏறு என, முகில்
     ஏறு எனச் செறிந்தார்.

    பேய் ஏறின - பேய்கள் கூட்டமாக வருவதற்குக் காரணமான; செரு
வேட்டு -
போரை விரும்பி; எழு பித்து ஏறினர் - எழுகின்ற பைத்தியம்
பிடித்த அரக்கர்களின்; பில வாய் - மலைக் குகை போல (ஆழ்ந்து
அகன்ற) வாய்களின் மேல்; நாய் ஏறின - பல நாய்கள் எறின; தலை
மேல் நெடுநரி ஏறின -
தலைகளின் மேல் பெரிய நரிகள் வந்து ஏறின; தீ
ஏறு (என) -
பெரிய நெருப்புப் போலவும்; இகல் அரி ஏறு என - வலிய
ஆண் சிங்கம் போலவும்; முகில் ஏறு என - மேகத்திலே தோன்றும் பேரிடி
போலவும்; வந்தார் செறிந்தார் - வந்து நெருங்கிய அரக்கர்கள்; எரி கால்
வாய் -
நெருப்பையுமிழும் நுனியிலே; ஏறின வடி வாளியின் - கூரிய
(இராமனுடைய) அம்புகளால்; வான் ஏறினர் - (போரில் மடிந்து) வீர
சொர்க்கத்திற்கு ஏறிச் சென்றார்கள்.

     பேயேறின செரு - பேய்கள் பிணங்களைத் தின்ன விரும்பி மிகுதியாக
வருமாறு பிராணிகளுக்கு அழிவையுண்டாக்கும் போர். பித்து - வரம்பு
கடந்த ஆசை. நாயும் நரியும் இறந்தவுடல்களைப் பிடுங்கித் தின்ன
வந்தவையாம்.                                               101