2976. தலை சிந்தின; விழி சிந்தின,
     தழல் சிந்தின; தரைமேல்
மலை சிந்தினபடி சிந்தின, வரி
     சிந்துரம்; மழைபோல்
சிலை சிந்தின கணை சிந்தின, திசை
     சிந்தின, திசையூடு
உலை சிந்தின, பொறி சிந்தின,
     உயிர் சிந்தின, உடலம்.

    தலை சிந்தின - (அரக்கர்களின்) தலைகள் சிதறின; தழல் சிந்தின
விழி சிந்தின -
நெருப்புப் பொறிகளையுமிழ்ந்த (அவர்களின்) கண்கள்
சிதறின; வரி சிந்துரம் - (இருக்கை வரிந்து) கட்டப்பட்ட யானைகள்; தரை
மேல் மலை சிந்தினபடி சிந்தின -
பூமியின் மேலே மலைகள் சிதறி
விழுந்தாற் போலச் சிதறின; சிந்தின மழை போல் சிலை சிந்தின
கணை-
பெய்த மேகம் போல (இராமனது) வில் உமிழ்ந்த அம்புகள்; திசை
சிந்தின -
எல்லாத் திசைகளிலும் சிதறி விழுந்தன; திசையூடு உலை
சிந்தின -
அந்தத் திக்குகளிலெல்லாம் உலைக் களத்திலிருந்து சிதறிய;
பொறி சிந்தின உடலம் - தீப் பொறி போன்ற நெருப்புப் பொறிகளைச்
சிதறிய (அரக்கரின்) உடம்புகள்; உயிர் சிந்தின - உயிர்கள் நீங்கின.

     விழி சிந்தின - கண்கள் சிதறின; தழல் சிந்தின - (அந்தக் கண்கள்
கொடுமையால் மேலும்) தீயுமிழ்ந்தன என்றும், உயிர் சிந்தின உடலம் -
உயிர் நீங்கிய உடம்புகள்; உலை சிந்தின பொறி சிந்தின - (கொடுமையால்
பின்பும்) உலை சிந்தின அனற் பொறிகளைச் சிதறின எனவும் பொருள்
உரைக்கலாம். மழை போல் சிலை கணை சிந்தின - மேகம் போல வில்
அம்புகளைச் சொரிந்தன; சிந்தின திசை (அந்த அம்புகள்) சிதறி விழுந்த
திக்குகள்; சிந்தின - அந்த அம்புகளின் வேகத்தால், இடிந்து விழுந்தன;
திசையூடு உலை சிந்தின - பொறி சிந்தின அத்திக்குகளிலெல்லாம் உலைக்
களத்துப் பொறிகள் போன்ற தீப்பொறிகள் சிதறின என்றும் உரைக்கலாம். 102