2978.சுற்றுற நோக்கினர்,
     தொடர்ந்த சேனையில்
'அற்றில தலை' எனும்,
     ஆக்கை கண்டிலர்;
தெற்றினர் எயிறுகள்;
     திருகினார் சினம்;
முற்றினர் இராமனை,
     முடுகு தேரினார்.

    (படைத் தலைவர் பதினால்வரும்) சுற்றுற நோக்கினர் - (தம்மைச்)
சுற்றிலும் எல்லாப் பக்கங்களிலும் பார்த்து; தொடர்ந்த சேனையில் -
தம்மைத் தொடந்து வந்த சேனைகளில்; தலை அற்றில எனும் ஆக்கை -
தலை அறாதவையென்று சொல்லக் கூடிய அரக்கரின் உடம்புகளை;
கண்டிலர் - (ஒன்றேனும்) காணாதவராகி; எயிறுகள் தெற்றினர் -
பற்களைக் கடித்துக் கொண்டனர்; சினம் திருகினார் - கோபம் மூண்டு;
முடுகு தேரினார் - விரைந்து செல்லும் தேர்களையுடையவர்களாய்;
இராமனை முற்றினர் - இராமபிரானைச் சூழ்ந்து கொண்டனர்.

     சேனையிலிருந்த குதிரைகள், யானைகள் உட்பட யாவும் தலையறு
பட்டமை விளங்கும். சினம் திருகுதல் - கோபத்தால் முறுக்கேறுதல்.
பற்களைக் கடித்தல் கோபத்தால் உண்டாகும் மெய்ப்பாடுகளுள் ஒன்று.  104