2979. | ஏழ்-இரு தேரும் வந்து, இமைப்பின் முன்பு, இடை சூழ்வன, கணைகளின் துணிய நூறினான்; ஆழியும், புரவியும், ஆளும் அற்று, அவை ஊழி வெங் கால் எறி ஓங்கல் ஒத்தவே. |
வந்து இடை சூழ்வன - வந்து பக்கத்திலே சூழ்ந்தவையான; ஏழ் இரு தேரும் - பதினான்கு தேர்களையும்; இமைப்பின் முன்பு - கண்ணிமைக்கும் நேரத்தில்; கணைகளின் - அம்புகளால்; துணிய நூறினான் - துண்டாகும்படி (இராமன்) அழித்தான் (அப்பொழுது); ஆழியும் புரவியும் - தேர்ச் சக்கரங்களும் குதிரைகளும்; ஆளும் அற்று - தேர்ச் சாரதிகளும் ஒழிந்து; அவை ஊழி வெம்கால் - அவை கொடிய ஊழிக் காற்றால்; எறி ஓங்கல் ஒத்த - எடுத்தெறியப்படுகின்ற மலைகளைப் போன்றன; ஏ - ஈற்றசை. ஊழிக் காற்று - இராமனுடைய அம்புக்கும், மலைகள் - வலிய பெரிய சக்கரம் பூண்ட தேர் முதலியவற்றுக்கும் உவமை. 105 |