2980. அழிந்தன தேர்; அவர்,
     அவனி கீண்டு உக,
இழிந்தனர்; வரி சிலை
     எடுத்த கையினர்;
ஒழிந்திலர்; சரங்களை உருமின்
     ஏறு எனப்
பொழிந்தனர், பொழி கனல்
     பொடிக்கும் கண்ணினார்.

    அழிந்தன தேர் - (இவ்வாறு) தேர்கள் அழிந்தன; அவர் - (அழிந்து
போகவே) அந்தப் படைத் தலைவர் பதினான்கு பேரும்; அவனி கீண்டு
உக -
பூமி பிளந்துவிடும்படி; இழிந்தனர் - கீழே இறங்கினர்; வரிசிலை
எடுத்த கையினர் -
கட்டமைந்த வில்லேந்திய கையையுடையவர்களும்;
ஒழிந்திலர் - (இவ்வாறு தளர்ச்சிக்கிடையிலும்) போர்க் களத்தை விட்டு
நீங்கினாரல்லர்; பொழிகனல் - நெருப்பைச் சிந்துகின்ற; பொடிக்கும்
கண்ணினார் -
கோபிக்கும் கண்களையுடையவர்களாகி; சரங்களை -
அம்புகளை; உருமின் ஏறு என - பேரிடிகள் என்று சொல்லும்படி;
பொழிந்தனர் - இடைவிடாது சொரிந்தார்கள்.

    தாம் ஏறியிருந்த தேர்கள் அழிந்து விடவே பதினான்கு சேனைத் தலைவரும்தரையிலிருந்தவாறே அம்பு மழை பொழிந்தார்களென்பது.   106