2981. நூறி சரம் எலாம்
     நுறுங்க வாளியால்
ஈறுசெய்து, அவர் சிலை
     ஏழொடு ஏழையும்
ஆறினோடு ஆறும் ஓர்
     இரண்டும் அம்பினால்,
கூறுசெய்து, அமர்த் தொழிற்
     கொதிப்பை நீக்கினான்.

    நூறிய சரம் எலாம் - அழிக்கும் இயல்புடைய (அந்த
அரக்கர்களின்) அம்புகளையெல்லாம்; நுறுங்க - பொடியாகும்படி;
வாளியால் - (இராமன் தன்) பாணங்களால்; ஈறு செய்து - அழித்து;
அவர் சிலை ஏழொடு ஏழையும் - அவர்களின் விற்கள் பதினான்கையும்;
ஆறினொடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் - பதினான்கு
அம்புகளால்; கூறு செய்து - துண்டுகளாக்கி; அமர்த் தொழிற்
கொதிப்பை நீக்கினான் -
போர்ச் செயலில் அவர்களின் உக்கிரத்தைப்
போக்கினான்.

     இராமன் பதினான்கு அரக்கர் தொடுத்து விடுத்த அம்புகளையெல்லாம்
தன் அம்புகளால் அழித்துப் பதினான்கு அம்புகளால் அந்த வீரர்களின்
விற்களைத் துண்டிக்கவே அன்னாரின் போரின் உக்கிரம் (வேகம்)
குறைந்தது என்பது.                                           107