2982. | வில் இழந்து, அனைவரும் வெகுளி மீக்கொள, கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார், ஒல்லையில் உருத்து, உயர் விசும்பில் ஓங்கி நின்று, எல் உயர் பொறி உக, எறிதல் மேயினார். |
அனைவரும் - அந்தப் படைத் தலைவர் எல்லோரும்; வில் இழந்து- (தம்) விற்களையிழந்ததனால்; வெகுளி மீக்கொள - கோபம் மேலிட; கல் உயர் நெடுவரை - கல்லால் உயர்ந்த பெரிய மலைகளை; கடிதின் ஏந்தினார் - விரைவில் (கையிலே) எடுத்துக் கொண்டு; ஒல்லையில் உருத்து - விரைவாக எழுந்து சீறி; உயர் விசும்பில் ஓங்கி நின்று - ஓங்கிய ஆகாயத்தில் உயர நின்று கொண்டு; எல் உயர் பொறி உக - கதிரவன் ஒளி போன்ற அளவில்லாத தீப் பொறிகள் சிந்த; எறிதல் மேயினார் - (அந்த மலைகளை) இராமன் மேல் வீசியெறிந்தார்கள். தம்முடைய விற்கள் துண்டிக்கப்படவே அந்த அரக்க வீரர் மலைகளையேந்தி வானத்தில் ஓங்கி நின்று எறியத் தொடங்கினர் என்பது. 108 |