படைத் தலைவர்கள் மாய, திரிசிரா போர்மேல் வருதல்

2984. படைத் தலைத் தலைவர்கள்
     படலும், பல் படை
புடைத்து, அடர்ந்து, எதிர் அழல்
     புரையும் கண்ணினார்.
கிடைத்தனர், அரக்கர்கள்; கீழும்
     மேலும் மொய்த்து
அடைத்தனர் திசைகளை;
     அமரர் அஞ்சினார்.

    படைத் தலைத் தலைவர்கள் படலும் - சேனையிடத்து முதன்மை
பெற்ற தலைவர்கள் பதினான்கு பேரும் இவ்வாறு இறந்த அளவிலே;
அரக்கர்கள் - மற்றுமுள்ள இராக்கதர்கள்; பல் படை புடைத்து -
தம்முடைய பல வகை ஆயுதங்களையும் வீசிக் கொண்டு; அடர்ந்து -
நெருங்கி; அழல் புரையும் கண்ணினார் - நெருப்பைப் போன்ற
கண்களையுடையவர்களாய்; எதிர் கிடைத்தனர் - இராமன் எதிரில்
நெருங்கி; கீழும் மேலும் மொய்த்து - நிலத்திலும் ஆகாயத்திலுமாக
மொய்த்துக் கொண்டு; திசைகளை அடைத்தனர் - திக்குகளை
மறைத்தார்கள் (அதனைக் கண்டு); அமரர் அஞ்சினார் - தேவர்கள்
அச்சங் கொண்டார்கள்.

     பதினான்கு படைத் தலைவரும் இறந்திடவே வேறு அரக்கர்கள்
சினத்தோடு ஆயுதங்களை வீசிக் கொண்டு எல்லாப் பக்கங்களிலும் திரண்டு
நெருங்கவே, தேவர்கள் அஞ்சினர் என்பது - படைத்தலை - 'தலை'
ஏழனுருபு.

     படைத் தலைவர்களோடு வந்த வீரர்கள் யாவரும் அழிந்தனர். என்று
முன் (3978) கூறினமையால் இங்கு வந்தவர் வேறு என்பதாயிற்று.     110