2985.முழங்கின பெரும் பணை,
     மூரி மால் கரி;
முழங்கின வரி சிலை
     முடுகு நாண் ஒலி;
முழங்கின சங்கொடு புரவி;
     மொய்த்து உற
முழங்கின அரக்கர்தம்
     முகிலின் ஆர்ப்புஅரோ.

    மூரி மால் கரி - வலிய பெரிய யானைகளும்; பெரும் பணை -
(அப்பொழுது) பெரிய போர்ப் பறைகளைப் போல; முழங்கின - பேரொலி
செய்தன; வரி சிலை முடுகு நாண் ஒலி - கட்டமைந்த விற்களில்
விரைவாகப் பூட்டப்பட்ட நாணின் ஓசைகள்; முழங்கின - ஆரவாரித்தன;
சங்கொடு புரவி - சங்க வாத்தியங்களும் குதிரைகளும்; முழங்கின -
முழக்கமிட்டன; அரக்கர்தம் முகிலின் ஆர்ப்பு - அரக்கர்களின் மேகம்
போன்ற கர்ச்சனை; மொய்த்து உற - மிக அடர்ந்து; முழங்கின -
பேரொலி செய்தன; அரோ - ஈற்றசை.

     சொற்பொருட் பின்வரு நிலையணி.                         111